மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த வெள்ளையன் கொட்டாவூர் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, நான்கு கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த தீர்த்தகலசத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள், கலசத்திற்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின், மகா சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், முன்னாள் அமைச்சர் அன்பழகன் உள்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.