கிருஷ்ணகிரி: ''பா.ஜ.,வையோ, பிரதமர் மோடியையோ, அண்ணாமலை பற்றியோ பேசவோ, முனுசாமிக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் கூறினார்.இது குறித்து, கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் பிரதமர் வேட்பாளர் யார், இந்த நாடாளுமன்ற தேர்தலில், இ.பி.எஸ்., முனுசாமி மற்றும் அ.தி.மு.க.,வினர் யாருக்காக ஓட்டு கேட்க போகிறார்கள். மோடிக்கா, ராகுலுக்கா அல்லது வேறு யாரேனும் ஒருவருக்கா என்பதை, அ.தி.மு.க., விளக்க வேண்டும். இ.பி.எஸ்.,சை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவோம் என சில, அ.தி.மு.க.,வினர் பேசுகின்றனர். அதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா. அ.தி.மு.க.,வில் மோடியை எதிர்ப்பவர்கள், ஆதரிப்பவர்கள் இருக்கின்றனர். அதிலேயே அவர்களால், ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், பா.ஜ.,வை கொச்சைப்படுத்தி பேசவோ, மோடி, அண்ணாமலையை பற்றி பேசவோ, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமிக்கு எந்த தகுதியும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.