தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியை தடுத்தோர் மீது நடவடிக்கைக்கு மனு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், விளங்காமுடி பஞ்.,க்கு உட்பட்ட மல்லிக்கல்லை சேர்ந்த, 70க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலவலத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:மல்லிக்கல்லையில், 350 குடும்பங்கள் வசிக்கிறோம். போச்சம்பள்ளி முதல் காரிமங்கலம் செல்லும் சாலையில், வீரமலை கூட்ரோடு அருகே மல்லிக்கல் கிராமம் உள்ளது. இங்கு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி, ரேஷன் கடை உள்ளிடவை உள்ளன. இப்பகுதியிலுள்ள சாலை, 50 வருடமாக பயன்பாட்டில் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னரே தார்ச்சாலையும் அமைக்கப்பட்டது. தற்போது அச்சாலை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. கடந்த, 25ல், அங்கு வந்த சிலர், சாலையை அகலப்படுத்தி, தங்கள் நிலங்களை அபகரிக்க முயல்வதாக கூறி, சாலை புதுப்பிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் ஊருக்குள் வந்து சென்ற, 45 மற்றும் 23ஏ ஆகிய இரு டவுன் பஸ்களையும் தடுத்து நிறுத்தி உள்ளனர்.இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியை தடுத்து நிறுத்தியவர்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.