தென்னக நதிகளை இணைப்பதன் மூலம் கடலில் வீணாக கலக்கும் நீரை தடுக்க மனு
தென்னக நதிகளை இணைப்பதன் மூலம் கடலில் வீணாக கலக்கும் நீரை தடுக்க மனுகிருஷ்ணகிரி, நவ. 20-தமிழக விவசாயிகள் சங்கத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் வகையில் தேசிய நீர்வழிச்சாலை திட்டம் அமல்படுத்துவது குறித்து கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்தும் நடக்கவில்லை. இது குறித்து அவ்வப்போது நீர் ஆதாரத்துறை, பன்மாநில நதிநீர் பிரிவு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டவில்லை. தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகள் பயன்படும் படி, கிருஷ்ணா, கோதாவரி, தென்பெண்ணையாறு, பாலாறு, காவிரியாற்றை இணைத்தால், உபரிநீர் பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பயன்படுவதோடு, விவசாயமும் மேம்படும். எனவே, தமிழக முதல்வர், அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவுடன் பேசி தென்னக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு கூறுகையில், ''ஆந்திரா வழியாக செல்லும் கோதாவரி, கிருஷ்ணா நதிகளின் உபரிநீரை தென்பெண்ணையுடன் இணைக்கலாம். கோதாவரி நதியில் மட்டும் ஆண்டுக்கு, 2,000 டி.எம்.சி., நீர் வீணாகி கடலுக்கு செல்கிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அருகில் இருப்பதால், இந்த நதிகளின் உபரி நீரை தென்பெண்ணையாற்றில் இணைத்து, அதை பாலாறு, ஒகேனக்கல் அருகில் காவிரியாற்றுடன் இணைத்தால், அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்கும். அதிகாரிகள் நீர்மட்டம், வழிப்பாதை குறித்து ஆய்வு செய்யட்டும். இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அவர் ஆந்திர, கர்நாடக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு உதவியோடு இதை செய்து கொடுத்தால் தமிழக விவசாயிகளுக்கு வாழ்நாள் உதவியாக இருக்கும்,'' என்றார்.