கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி நகரில், பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது. இன்று காலை மக்கள் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைப்பது வழக்கம். இதையொட்டி, சேலம் சாலையில் விற்பனைக்கு வைத்திருந்த பொங்கல் பானை ஒன்று, 120 முதல், 700 ரூபாய் வரை விற்பனையானது. காப்புக்கட்டு ஒரு கட்டு, 10 ரூபாய்க்கும், ஒரு ஜோடி மஞ்சள் கொத்து, 30 முதல், 50 ரூபாய் வரைக்கும் விற்றன. ஒரு ஜோடி கரும்பு நேற்று, 120 முதல், 200 ரூபாய், வாழைத்தார், 400 முதல், 600 ரூபாய் வரையும் விற்றது. மேலும் கோலப்பொடி, வண்ணப்பொடிகள், பூக்கள், தோரணங்கள், மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் என பொங்கலுக்கு தேவையான அனைத்தையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். நேற்று காலை முதல் நகரிலுள்ள அனைத்து ஜவுளிக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் நேற்று காலை முதல் கிருஷ்ணகிரி நகரின் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். * அரூரில், கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், சந்தைமேடு, நான்குரோடு, கச்சேரிமேடு உள்ளிட்ட இடங்களில், செங்கரும்பு, மஞ்சள் கொத்து, காப்புக்கட்டு பூ ஆகியவை விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். புத்தாடை மற்றும் பூஜை பொருட்களை வாங்க, நேற்று காலை முதல், அரூர் கடை வீதியில் மக்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவைகளை தடுக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்ததால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.