தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே, பகுதிநேர வேலை எனக்கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், 8.11 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த காடிச்சிப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷா, 38, தனியார் நிறுவன ஊழியர். இவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு கடந்த செப்., 16ல் ஒரு 'மெசேஜ்' வந்துள்ளது. அதில், பகுதிநேர வேலைக்கு ஊதியம் எனவும், பிரபல நிறுவனத்தின் பெயரில் ஒரு இணையதள முகவரியும் அனுப்பி, இதில், உங்கள் விபரங்களை பதிவு செய்து, முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. அதை நம்பிய ரமேஷா, அவர்கள் குறிப்பிட்ட இணையதள முகவரியில், தன் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கிலிருந்த, 8.11 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் எடுத்துள்ளனர். இதையடுத்து, அந்த இணையதள பக்கம் முடங்கியது. ரமேஷாவுக்கு, 'மெசேஜ்' அனுப்பிய மொபைல் எண்களும், 'சுவிட்ச் ஆப்' ஆனது.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷா, நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.