கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மேளதாளங்களுடன் பிரம்மாண்ட பேரணி நடத்தி, பிரசாரத்தை முடிக்க முக்கிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.தமிழகத்தில் வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இன்று (17ம் தேதி) மாலை, 5:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளர் கோபிநாத், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ், பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் ஆகியோரிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதில், ஜெயபிரகாஷ், கோபிநாத் ஆகிய இருவரும் ஓசூரை சேர்ந்தவர்கள். தேர்தல் ரேசில் உள்ள, காங்., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் தங்கள் பலத்தை காட்டும் வகையில் இன்று காலை கிருஷ்ணகிரியில் மேளதாளங்களுடன் பிரம்மாண்ட பேரணி நடத்தி முக்கிய வீதிகளில் செல்கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும், பேரணிக்கு, 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாலும், ஒரே நேரத்தில் பேரணிக்கான நேரமும் கேட்டதால், நேரம் ஒதுக்குவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இறுதியில் காலையிலேயே, அ.தி.மு.க., பேரணியும், தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியின், காங்., பேரணியும் நடக்கிறது. அதேபோல், முக்கிய வேட்பாளர்கள் அனைவரும், ஓசூர் என்பதால், தங்கள் பிரசாரத்தை ஓசூரில் நிறைவு செய்கின்றனர்.