அரசு கட்டணத்திலேயே தனியார் மையத்தில் சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க பரிந்துரை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் இருந்து, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், அரசு நிர்ணயித்த கட்டணத்தில், தனியார் மையத்தில் நோயாளிகள், சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி நகர், காந்தி சிலை செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கடந்த 2022ல்,- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை மாற்றப்பட்டது.பழைய அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் மற்றும் கண் சிகிச்சை பிரிவு மட்டுமே பார்க்கப்படுகிறது. மேலும், சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மையமும் செயல்பட்டு வந்தது. இங்கு சி.டி., ஸ்கேன் எடுக்க, 500- ரூபாய், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க, 2,500-ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தனியார் ஸ்கேன் மையங்களை விட, குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகளவில் வந்து சென்றனர். இந்நிலையில், தற்போது கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையம், போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. அரசு மருத்துவமனையில் சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், கிருஷ்ணகிரி அடுத்த கீழ்புதுாரில் உள்ள ஸ்டார் சி.டி., ஸ்கேன் மையத்திற்கு சென்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கான பரிந்துரை கடிதம், போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது, என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.