சிறுத்தை நடமாட்டம் தகவலால் குடியிருப்பு பகுதியில் மக்கள் பீதி
ஓசூர், தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள உப்கார் ராயல் கார்டன் பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியை சுற்றி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, நேற்று காலை, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அத்துடன், ஓசூர் வனச்சரக அலுவலகத்திற்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையிலான வனத்துறையினர், உப்கார் ராயல் கார்டன் பகுதியில், சிறுத்தை காலடி தடயம் ஏதும் உள்ளதா என சோதனை செய்தனர். ஆனால், எந்த காலடி தடயமும் சிக்கவில்லை. கர்நாடகா மாநிலத்தில் இருந்து சிறுத்தை வந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதால், வனத்துறையினர் நேற்று மாலை, 6:30 மணிக்கு மேல், மீண்டும் உப்கார் ராயல் கார்டன் பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என சோதனை செய்தனர். இதுவரை சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் உறுதி செய்யவில்லை.