வனத்தில் 40 யானைகள் விரட்டியடிப்பு தாக்க வந்த ஒற்றை யானையால் அதிர்ச்சி
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த, 40க்கும் மேற்பட்ட யானைகளை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இரு நாட்களுக்கு முன் வனத்துறையினர் விரட்டினர்.போடிச்சிப்பள்ளி அருகே விவசாயிகள், வனத்துறையினரிடம் வாக்குவாதம் செய்ததால், யானைகளை விரட்டும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் சினிகிரிப்பள்ளி கரடு வனப்பகுதியில், 15 யானைகள் ஒரு குழுவாகவும், 25க்கும் மேற்பட்ட யானைகள் மற்றொரு குழுவாகவும் தஞ்சமடைந்தன. அவற்றை நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை நோக்கி, வனத்துறையினர் விரட்டினர். இதனால் பேவநத்தம் வனப்பகுதிக்கு நேற்று அதிகாலை, 25க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்தன.மற்றொரு குழுவாக இருந்த, 15க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் குட்டிகள், கோட்டட்டி பகுதியில் முகாமிட்டு, நீண்ட நேரத்திற்கு பின் பேவநத்தம் சென்றன. அப்போது கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை, வனத்துறையினரை தாக்க ஓடி வந்தது. வனத்துறையினர் அதிக சத்தம் போட்டதுடன், பட்டாசுகளை வெடித்ததால் சென்றது. இந்த யானைகள் கூட்டத்தை, ஜவளகிரி வழியாக கர்நாடகாவுக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.