| ADDED : ஜூன் 21, 2024 07:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி சர்வீஸ் சாலையில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி நகரை சுற்றி, 3 பக்கத்திலும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு, பல இடங்களில், சாலையோரம் மழை நீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் கால்வாயை முழுமையாக கட்டி முடிக்காமல், ஆங்காங்கே அப்படியே விட்டுள்ளனர். இதனால் மழை நீர் தேங்கி நாளடைவில் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கி விடுகிறது.இந்நிலையில், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராயக்கோட்டை மேம்பாலம் முடியும் இடத்திலுள்ள சர்வீஸ் சாலையில், மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கியுள்ளது. இதனால் சாலை சேதமாகி வருவதோடு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதேபோல், காந்தி நகரிலுள்ள சர்வீஸ் சாலை மற்றும் ஆவின் மேம்பாலம் அருகிலுள்ள டி.சி.ஆர்., சர்க்கிள் பஸ் நிறுத்தம் அருகே, சர்வீஸ் சாலையில் மழை நீர் வெளியேற வழியின்றி மாதக்கணக்கில் சாலையில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த, 3 பகுதிகளிலும், மழை நீர் வெளியேற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.