ஓசூரில் பள்ளிகளுக்கு சோப் ஆயில், பினாயில் 3 மாதமாக சப்ளை நிறுத்தம்; மாணவர்கள் பாதிப்பு
ஓசூரில் பள்ளிகளுக்கு சோப் ஆயில், பினாயில் 3 மாதமாக சப்ளை நிறுத்தம்; மாணவர்கள் பாதிப்புஓசூர், அக். 1-ஓசூரில் மொத்தம், 35 மாநகராட்சி துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ, மாணவியர் பயன்படுத்தும் கழிவறைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக பராமரிக்க, மாதந்தோறும் சோப் ஆயில், பினாயில் போன்றவற்றை மாநகராட்சி வழங்குகிறது. இப்பணியை, தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்கிறது. கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு வரை, பள்ளி கழிவறைகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கையை பொருத்து அதிகபட்சமாக, 30 லிட்டர் வரை மாதந்தோறும் பினாயில், சோப் ஆயில் வழங்கப்பட்டது. அதன் பின் மாதம் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கினர். கடந்த ஜூன் மாதம் கடைசியாக வழங்கப்பட்டது. அதன் பின், 3 மாதமாக வழங்கப் படவில்லை. அதனால், பள்ளிகளில் கழிவறைகளை சரியாக சுத்தம் செய்ய முடிவதில்லை. இதனால் மாணவ, மாணவியருக்கு தொற்று பரவும் அபாயம் உருவாகி உள்ளது. மாநகராட்சி கமிஷனரும், பள்ளி தலைமையாசிரியர்களுடன் மீட்டிங் நடத்தி உள்ளார். ஆனால் பிரச்னை இதுவரை தீர்க்கப்படவில்லை. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படுகிறது. அதற்கு முன் இதை சரிசெய்ய, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, மேயர் சத்யாவிடம் கேட்டபோது, ''ஒப்பந்ததாரர் சரியாக பினாயில், சோப் ஆயில் வழங்கவில்லை என, பல புகார்கள் வந்துள்ளன. அவரது ஒப்பந்தத்தை கேன்சல் செய்து விட்டு, புதிய ஒப்பந்தம் விட ஏற்பாடு செய்கிறோம்,'' என்றார்.