கலெக்டர் சொன்னால் தண்ணீர் வருமா என மிரட்டல் குறை தீர் கூட்டத்தில் விவசாயி பரபர குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி: 'ஈச்சம்பாடி அணைக்கட்டின் இடதுபுற வாய்க்காலை என் சொந்த செலவில் துார்வாரிக் கொள்கிறேன் என்றால், அனுமதி மறுக்கின்றனர். பொதுப்பணித்துறை என்.எம்.ஆர்., பணி செய்பவர், கலெக்டர் சொன்னால் தண்ணீர் வருமா, என்னை கவனி என மிரட்டுகிறார்' என, குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சரயு தலைமையில் நேற்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் அளித்த பதில்கள்: விவசாயி சக்தி: கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில், பட்டாவில் பெயர் மாற்ற, 7,000 ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். கலெக்டர் சரயு: யார் பணம் கேட்டார்கள் என்று சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெருமா: கூலியம் - கும்மனுார் இடையில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில் தடுப்பணை கட்ட வேண்டும். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன்: கும்மனுாரில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் வட்டக்கோவில் என்ற இடத்தில் பாலம் கட்டுவதால் இங்கு கட்ட இயலாது. ராமகவுண்டர்: மற்ற மாநிலங்களில் பாம்பு கடித்து இறந்தால், 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தருகின்றனர். அதே போல் இங்கும் வழங்க வேண்டும். வனச்சரக அலுவலர் வெங்கடாஜலம்: பாம்பு கடிக்கு என்று தனியாக இழப்பீடு இங்கு வழங்குவதில்லை. அரசுக்கு பரிந்துரைக்கப்படும். மகாராஜன்: தாமோதரஹள்ளி, பண்ணந்துார் மற்றும் குடிமேனஹள்ளி பஞ்.,த்தில் ஒட்டு என்ற இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் உறவினர்கள் என்பதால் இதுவரை அகற்றவில்லை. கலெக்டர்: விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சவுந்தர்ராஜன்: இந்த ஆண்டு, 82 சதவீத மா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைவில் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். கலெக்டர்: முதன்மை செயலாளரிடம் இது குறித்து பேசியுள்ளேன். விரைவில் இழப்பீடு பெற்றுத்தரப்படும். செந்தில்குமார்: ஈச்சம்பாடி அணைக்கட்டின் இடதுபுற வாய்க்காலை என் சொந்த செலவில் துார்வாரிக் கொள்கிறேன் என்றால், அனுமதி மறுக்கின்றனர். பொதுப்பணித்துறை என்.எம்.ஆர்., பணி செய்பவர், 'கலெக்டர் சொன்னால் தண்ணீர் வருமா, என்னை கவனி' என மிரட்டுகிறார். கலெக்டர்: விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.