ஓசூர் : மத்திகிரி, அரசு கால்நடை பண்ணைக்குள், 2 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 2 ஆண் யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, மத்திகிரி அரசு கால்நடை பண்ணைக்குள் கடந்த மாதம் புகுந்தன. அவற்றை, ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து, தளி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். நேற்று முன்தினம் இரவு, கால்நடை பண்ணைக்குள் மீண்டும், 2 யானைகள் சுற்றித்திரிவதை, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பார்த்துள்ளனர். ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர், கால்நடை பண்ணைக்குள் யானைகள் முகாமிட்டுள்ளதா அல்லது இரவில் மீண்டும் வனப்பகுதி நோக்கி சென்று விட்டதா என்பதை அறிய, தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மத்திகிரி கால்நடை பண்ணை அருகே, இடையநல்லுாரில் பிரான்சிஸ், 70, என்பவரது தோட்ட காம்பவுண்ட் சுவரை உடைத்து உள்ளே புகுந்த யானைகள், பலா மரம், பயிர்களை சேதப்படுத்தி விட்டு, மீண்டும் கால்நடை பண்ணைக்கு சென்றன. அந்த யானைகளை விரட்ட, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.