கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்கவரி உயர்த்தப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பஸ் உரிமையாகள், மூன்றாவது நாளாக நேற்றும் பஸ்களை நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பைனப்பள்ளி அருகே டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுங்கவரி வசூலிக்கும் உரிமம் ஆரம்பத்தில் இருந்தே தனியாருக்கு விடப்பட்டுள்ளது. தற்போது, சென்னையில் இருந்து ஓசூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை, ஆறு வழி சாலையாக மாற்றும் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே மண் பரிசோதனை போன்ற முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆறு வழி சாலையாக மாற்றப்படுவதை காரணம் காட்டி, கிருஷ்ணகிரி டோல்கேட்டில் பஸ்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த சுங்கவரி, 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி தனியார் பஸ் உரிமையாளர்கள் மாதம், 38 ஆயிரம் முதல், 48 ஆயிரம் ரூபாய் வரை சுங்கவரியாக செலுத்த வேண்டும். ஆறுவழி சாலை பணிகள் ஆரம்பிக்காததற்கு முன்பே சுங்கவரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வரை செல்லும் தனியார் பஸ் உரிமையாளர்கள், கடந்த 8ம் தேதி முதல் பஸ்களை இயக்காமல் டோல்கேட் அருகே நிறுத்தி வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். சுங்க வரி குறைப்பது குறித்து டோல்கேட் நிர்வாகம் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், மூன்றாவது நாளக நேற்றும் கிருஷ்ணகிரி-ஓசூர் மார்க்கத்தில் செல்லும், 27 தனியார் பஸ்களை டோல்கேட் அருகே நிறுத்தி பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தர்மபுரி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து நேற்று நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் மணிவண்ணன், பொருளாளர் செல்வம் ஆகியோர் உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியது: கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்க வரி உயர்த்தப்பட்டத்தை திரும்பபெறவேண்டும். டோல்கேட்டில் சுங்கவரி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், 18ம் தேதி நடத்தவுள்ள வேலை நிறுத்த போராட்டம் குறித்து டில்லியில் அதன் தலைவர் சண்முகப்பா தலைமையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை (இன்று) நடக்கும் பேச்சுவார்த்தையில் கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் சிவானாந்தம் பங்கேற்கிறார். 'கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்கவரி, 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெறவேண்டும்' என, வலியுறுத்தப்படும். பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாவிட்டால் மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டம் செய்வது குறித்து சங்கத்தின் மாநில நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மூன்றாவது நாளாக கிருஷ்ணகிரி-ஓசூர் மார்கத்தில், 27 தனியார் பஸ்களும் இயக்கப்படாதாதால் பஸ் உரிமையாளர்களுக்கு, 6 லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், 27 பஸ்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர், செக்கிங் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.