உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடும் நிலை அதிகாரிகள் மெத்தனம் என தொழிலாளர்கள் தர்ணா

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடும் நிலை அதிகாரிகள் மெத்தனம் என தொழிலாளர்கள் தர்ணா

பாலக்கோடு: தமிழத்தில் இயங்கும், 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையும் ஒன்று. கடந்த, 1969ல் நிறுவப்பட்ட இந்த ஆலையில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இந்த சர்க்கரை ஆலைக்கு பாலக்கோடு பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள், தங் கள் கரும்பை பதிவு செய்து, அரவைக்கு அனுப்பி வருகின்றனர். நடப்பாண்டில், குறைந்தளவில் கரும்பு பதிவு செய்துள்ளதால், 15 நாள் அரவைக்கு கூட கரும்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, சர்க்கரை ஆலை மூடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளதை கண்டித்து, நேற்று தொழிலாளர்கள், ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சர்க்கரை ஆலை டி.ஆர்.ஓ., ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு எட்டாததால், சர்க்கரை ஆலை முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கூறுகையில், 'பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஓராண்டில், 6 லட்சம் டன் கரும்பை தொடர்ந்து, 9 மாதங்கள் அரவை செய்து சாதனை படைத்தது. நாளடைவில், அதிகாரிகள் மெத்தனத்தால், விவசாயிகள் கரும்பு பதிவு செய்வது குறைந்து, வருடத்திற்கு, 40,000 டன் கரும்பு பதிவு செய்வது பெரிய சாதனையாக உள்ளது. கடந்தாண்டு ஒரு மாதம் கூட அரவை செய்ய முடியாமல், போட்டோஷூட்டுக்காக அரவையை தொடங்கி, 12 டன் கரும்பு மட்டும் அரவை செய்த நிலையில், ஆலையை மூடினர். நடப்பு ஆண்டில், 30,000 டன் அளவுக்கு கரும்பு பதிவு செய்துள்னர். மேலும், சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரிகள் ஆலைக்கு தேவையான கரும்பை விவசாயிகளிடம் பதிவு செய்வதில்லை. விவசாயிகளுக்கு விதை கரும்புகளை வழங்குவதில்லை. கொள்முதல் செய்யும் கரும்பிற்கான பணத்தை உரிய காலத்தில் வழங்குவதில்லை. விவசாயிகள் விளைவித்த கரும்பை, 8 முதல், 10 மாதத்தில் அறுவடை செய்யாமல், கரும்பில் பூ எடுத்து, கரும்பு காய்ந்த பின்னரே கொள்முதல் செய்வதால், கரும்பின் எடை குறைந்து, விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.இதனால், ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. மேலும், சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகளிடம் சென்று, மத்திய அரசின் திட்டம், மானியம் குறித்து தெரிவித்து, கரும்பு பதிவு செய்யும் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் ஆலை மூடும் நிலைக்கு சென்றுள்ளது. எனவே, இதற்கு காரணமான சர்க்கரை ஆலை சி.டி.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து, வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும். இல்லையெனில், பாலக்கோடு பகுதியில் கரும்பு விவசாயம் அடியோடு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை