ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 10வது உலக யோகா தினத்தையொட்டி, பதாஞ்சலி யோகா சமிதி சார்பில், ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று காலை யோகா நிகழ்ச்சி நடந்தது.பதாஞ்சலி யோகா சமிதி மாநில தலைவர் பரஸ் தலைமையில், நுாற்றுக்கணக்கானோர் யோகாசனம் செய்தனர். சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, வயதானவர்களுக்கு எளிய பயிற்சி உட்பட பல்வேறு யோகாசன பயிற்சிகளை பொதுமக்கள் செய்தனர். யோகா மூலம் உடலும், மனமும் மேன்மை பெரும் என தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், ஓசூர் மீரா மகால் மண்டபத்தில், பா.ஜ., சார்பில் உலக யோகா தினத்தையொட்டி, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ்சிவா, டாக்டர் சண்முகவேல், முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் உட்பட, 120க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர்.நல்லுார் அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளி சார்பில், அதன் தலைவர் அஸ்வத் நாராயணா தலைமையில் ஏராளமான மாணவ, மாணவியர், பொதுமக்கள் யோகாசனம் செய்தனர். அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், யோகா பயிற்சி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராஜரத்தினம் மற்றும் துறைத்தலைவர்களான பாலாஜி, பிரகாஷ், புவியரசு, நாகராஜ் உட்பட பலர் யோகாசனம் செய்தனர்.