மதுரை : மதுரையில் தங்களை பிடிக்க முயன்ற கரிமேடு போலீசார் மீது, வெடிகுண்டு வீச முயன்ற தூத்துக்குடி ரவுடி தம்பிராஜா,45, உட்பட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து கத்தி, வெடிகுண்டுகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.மதுரை புட்டுத்தோப்பு ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பவர் மணி நத்தானியேல்,71. இவரது உறவினர் தம்பிராஜா. தூத்துக்குடியைச் சேர்ந்த இவருக்கு பிரகாஷ், கோல்டு வின்னர் உட்பட பல பெயர்கள் உண்டு. கடந்தாண்டு ஏப்.,6ல் மணிநத்தானியேல் வீட்டிற்கு கூட்டாளிகளுடன் வந்த இவர், துப்பாக்கியை காட்டி, ரூ.ஒரு லட்சம் கேட்டு மிரட்டினார். போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், தலைமறைவானார். இவர் மீது மதுரையில் 3 வழக்குகள், சென்னையில் 7 வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வாடகை சுமோ காரில் மீண்டும் மணிநத்தானியேல் வீட்டிற்கு கூட்டாளிகளுடன் வந்த தம்பிராஜா, ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டினார். இதுகுறித்து கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏட்டுகள் அன்பு, ராமலிங்கம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். குடிபோதையில் இருந்த தம்பிராஜா மற்றும் கூட்டாளிகளை பிடிக்க முயன்றபோது, அலுமினிய பவுடர், கரிமருந்து, இரும்பு, கற்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளை வீச முயன்றனர். தடுத்த போலீசாரை, தம்பிராஜாவின் கூட்டாளியான பரமக்குடி குமாரகுறிச்சியைச் சேர்ந்த கரிகாலன்(25), கத்தியால் வெட்ட முயன்றார். லத்தியால் போலீஸ் தாக்க, கரிகாலனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.இதைதொடர்ந்து, தம்பிராஜா உட்பட கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், பரமக்குடி பிரவீன்குமார், 20 மீது கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த சுகந்தன், 26 மீது கொலை, வழிப்பறி வழக்குகளும், கரிகாலன் மீது கொலை, நகைபறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கரூர் ரவி, 30, பரமக்குடி கோமதிநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் குருமூர்த்தி, 34 ஆகியோர் மீதான வழக்குகள் குறித்து விசாரணை நடக்கிறது.