| ADDED : ஜூன் 12, 2024 12:30 AM
மதுரை : மதுரை காந்தி மியூசிய புனரமைப்புக்கு ஏற்கனவே ரூ.6 கோடி வழங்கிய நிலையில் ரோடு, பிற பணிகளுக்காக ரூ.4 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள காந்தி மியூசியம் ராணி மங்கம்மாள் காலத்தில் 1700 ல் கட்டிய கோடைகால அரண்மனை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அதன் பழமை மாறாமல் அரண்மனையை ஒட்டி வலதுபக்கத்தில் கூடுதல் கட்டடம் கட்டி, கலெக்டர், நீதிபதிகளின் குடியிருப்பாக மாற்றப்பட்டது. 1956 ல் டில்லி காந்தி நினைவு அறக்கட்டளைக்கு தமிழக அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டது. 1956 முதல் 1959 வரை அரண்மனையில் கதவு, ஜன்னல்கள் என; கூடுதல் வேலைப்பாடு செய்யப்பட்டது. 1959ல் இந்தியாவிலேயே முதன்முதலாக இங்கு காந்தி மியூசியம் அன்றைய பிரதமர் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. பிரமிக்க வைக்கும் தர்பார் ஹால்
300 ஆண்டுகளைக் கடந்த இந்த அரண்மனையின் மாடியில் உள்ள தர்பார் ஹாலில் மட்டும் 47 சதுர துாண்கள் உள்ளன. ஒவ்வொரு துாணும் இரண்டடி நீள, அகல, தடிமனுடன் பிரமாண்டமாக காட்சி தருகிறது. பக்கவாட்டில் தியேட்டர் வடிவில் சிறிய அறை அமைத்து, இரும்புத்துாண்கள் இணைக்கப்பட்டு பலகைகளால் (கெட்டி மச்சு) கூரை அமைக்கப்பட்டுள்ளது. துாண்கள் மற்றும் சுவர்களின் சுண்ணாம்புப்பூச்சு ஆங்காங்கே உதிர்ந்ததால் 2022 ல் மியூசியத்தை புதுப்பிக்கவும் புனரமைக்கவும் முதல்வர் ஸ்டாலின் ரூ.6 கோடி நிதி ஒதுக்கினார்.தற்போது பழமை மாறாமல் சுண்ணாம்புப்பூச்சு முறையில் துாண்கள், சுவர்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 1956 ல் அரண்மனை எப்படி இருந்ததோ அதே முறையில் பாதுகாக்கும் வகையில் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்த சுவர், ஜன்னல்கள் மீண்டும் அகற்றப்பட்டு பழைய வடிவம் பாதுகாக்கப்படுகிறது. துாண்களின் மீது பூச்சு முடிந்தபின் துாண்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் டிஜிட்டல் புகைப்பட கண்காட்சி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.13.5 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த வளாகத்தில் திறந்தவெளி ஆடிட்டோரியம், ஆங்காங்கே சிறு குடில்கள் உள்ளன. ஆடிட்டோரியம், ரோடு, பாதாள சாக்கடை வசதி, குடிநீர், கழிப்பறை சீரமைப்புக்காக தற்போது கூடுதலாக ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்டில் பணி நிறைவு பெற உள்ளது.