போக்குவரத்து ஓய்வு ஊழியர் 900 பேர் கைது
மதுரை : மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஓய்வு ஊழியர்கள் 900 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மூன்று ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தாதது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தினர்.மாநில துணைப் பொதுச்செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.105 மாத அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். 2003 முதல் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்சார வாரியம், குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு வழங்குவது போல் மருத்துவ காப்பீடு திட்டத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும். பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.திண்டுக்கல் மண்டல பொதுச்செயலாளர் ஜேம்ஸ் கஸ்பாராஜ், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மதுரைக் கிளை பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் சவுரிதாஸ், நிர்வாகிகள் ஜெயபாண்டியன், ராஜேந்திரன், மாணிக்கம், மனோகரன் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 900 பேரை போலீசார் கைது செய்தனர்.