| ADDED : ஆக 31, 2024 06:09 AM
மதுரை : மதுரையை பசுமையாக்கும் முயற்சியாக அதிக மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் மாணவருக்கு ரூ. ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பார்வை பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன் தெரிவித்தார்.திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பவுண்டேஷன், இளம் மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார். 450 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. தலைமையாசிரியர் சிவக்குமார், மாவட்ட பசுமை ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், மேலுார் கல்வி மாவட்ட பசுமை ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பவுண்டேஷன் நிறுவனர் பொறியாளர் சோழன் குபேந்திரன் கூறியதாவது: அப்துல்கலாம் மீது கொண்ட ஈர்ப்பால் 12 ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து வருகிறேன். இதுவரை 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளேன். லாரி மூலம் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறேன். 15 அடி உயர மரக்கன்றாக மட்டுமே நடுகிறோம். வேம்பு, பூவரசு, புங்கை, வாகை, மருதம், கடம்பம் போன்ற நாட்டு வகைகளை நடுகிறோம். ஒரு கோடி மரங்கள் நடுவதே இலக்கு.இந்த ஆண்டு மதுரையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்காக 10 ஆயிரம் மரக்கன்றுகளை ஒதுக்கீடு செய்துள்ளோம். இன்று நடந்த நிகழ்வில் 450 மரக்கன்றுகள் நடப்பட்டதோடு மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பாக மரங்கள் நட்டு வளர்க்கும் மாணவருக்கும் அதை ஊக்குவிக்கும் ஆசிரியருக்கும் சேர்த்து இயக்கம் சார்பில் ரூ. ஒரு லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் இருப்பார். மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் மரங்களை நட்டு அவரை 'டேக்' செய்ய வேண்டும். ஒரு கல்வியாண்டில் மாணவர்கள் எத்தனை மரக்கன்று நட்டு பராமரிக்கின்றனர் என்பதன் அடிப்படையில் தேர்வு செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். இவரை வாழ்த்த 99437 42425