| ADDED : ஜூலை 31, 2024 05:39 AM
புதுடில்லி : அணுசக்தி உற்பத்தியில் அடுத்த நிலைக்கு செல்லும் வகையில், அதிவேக ஈனுலையில் மாற்று அணு எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.தற்போது நம் நாட்டில் அதிகவேக ஈனுலை, தமிழகத்தின் கல்பாக்கத்தில், 39 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் யுரேனியம் என்ற அணுசக்தி, மின்சாரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக பயன்படுத்தப்படும் அணுசக்தியைவிட, அதில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும்.அதே நேரத்தில், யுரேனியம் மிகவும் குறைந்த அளவே கிடைத்து வருகிறது. இந்நிலையில், இதற்கு மாற்றாக, தோரியம் என்ற அணு எரிசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. நம் நாட்டில் தோரியம் அபரிமிதமாக கிடைக்கிறது.இதற்கு முன்பாக, யுரேனியத்துக்கு மாற்றாக, புளோட்டோனியம் என்ற அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சிறப்பான பலன்களை அளித்தால், அதற்கடுத்து தோரியம் பயன்படுத்தப்படும்.இதன் வாயிலாக, அடுத்த, 300 ஆண்டுக்கு அணுசக்தி மின்சார உற்பத்தியில் எந்த நாட்டையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு இருக்காது என, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தினேஷ் குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.