உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடைகளுக்கான பணத்துடன் 17 ஆண்டுகளாக காத்திருப்பு மதுரை விற்பனைக்குழுவால் தாமதமாகும் கிரையம்

கடைகளுக்கான பணத்துடன் 17 ஆண்டுகளாக காத்திருப்பு மதுரை விற்பனைக்குழுவால் தாமதமாகும் கிரையம்

மதுரை: மாட்டுத்தாவணியில் மதுரை விற்பனைக்குழு கட்டியுள்ள வேளாண் விளைபொருள் வணிக வளாகத்தில் உள்ள நெல் வணிக கடைகளிடம் பணத்தைப் பெற தாமதம் செய்வதால் 63 கடைகள் 17 ஆண்டுகளாக கிரையம் செய்யப்படாமல் உள்ளது. 2006 பிப்ரவரியில் இங்கு 30க்கு 20 அடி வீதம் 600 சதுரடி பரப்பளவில் நெல் கமிஷன் கடைகள் அமைக்க திட்டமிட்டு 127 கடைகள் கட்டப்பட்டன. கடைகள் கிரையம் செய்வதற்கு சொந்த பணத்தை செலுத்த மதுரை விற்பனைக்குழு அனுமதிக்காததால் இதுவரை பிரச்னை தீரவில்லை என்கிறார் மாட்டுத்தாவணி நெல் கமிஷன் ஏஜன்சிகள் சங்க செயலாளர் பெருமாள். அவர் கூறியதாவது: பழைய நெல்பேட்டையில் நுாறாண்டு காலமாக கடைகள் வைத்திருந்தோம். எங்களை மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்து ரூ.5 லட்சத்து 64ஆயிரம் மதிப்பில் கிரைய அடிப்படையில் 127 கடைகள் ஒதுக்கினர். முதற்கட்டமாக அனைவருமே ரூ.85ஆயிரம் செலுத்தி விட்டோம். எங்களிடம் உள்ள பணத்தை கொண்டு கடைகள் வாங்குகிறோம் என்ற போது 16 சதவீத வட்டியில் மதுரை விற்பனைக்குழு மூலமே பணத்தை பெற வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதை எதிர்த்து 2007ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அடுத்து உச்சநீதிமன்றம் சென்ற போது அசல் தொகை ரூ.4லட்சத்து 79 ஆயிரம், 16 சதவீத வட்டித்தொகை ரூ.13 லட்சம் சேர்த்து செலுத்த வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் 3 மாதங்களுக்குள் தொகையை செலுத்தி கிரையம் செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்த தொகையை தர நாங்கள் தயாராக உள்ள நிலையில் கூடுதலாக ரூ.13 லட்சம் அபராத வட்டி கேட்டு நெருக்கடி செய்கின்றனர். இதில் 64 பேருக்கு கடைகள் கிரையம் செய்யப்பட்டு விட்டது. மீதி 63 பேர் பத்திரம் பதிய தயாராக உள்ளோம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் அபராத வட்டி கேட்டு தாமதம் செய்கின்றனர். இதைத்தவிர எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாத நிலையில் தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை