கேட்காமலேயே நிலங்களை கையகப்படுத்தும் சட்டம் திரும்பப்பெற வலியுறுத்தல்
மதுரை : விவசாயிகளை கேட்காமலேயே நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளை பாதிக்க வைக்கும் நிலஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவத் தலைவர் ராமன் கூறியதாவது: தென் மாவட்ட பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் வைகை அணையில் 20 அடி ஆழத்திற்கு சேறு, வண்டல் படிந்துள்ளது. கடந்தாண்டே இதுகுறித்து துார்வாருவதற்கான ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. வரும் வேளாண் பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். தமிழக அரசின் புதிய சட்டமான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் கீழ் விவசாயிகளை கேட்காமலேயே நிலங்களை கையகப்படுத்த முடியும். இச்சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். நெல் கொள் முதல் மையங்களை நுகர்பொருள் வாணிப கழகத்திடம் இருந்து தனியாருக்கு மாற்றக்கூடாது.வைகை அணையிலிருந்து செயல்படுத்தப்படும் உசிலம்பட்டி 58ம் கால்வாய் பாசன திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட்டு பாசன கால்வாய்களை சிமென்ட் கால்வாயாக மாற்ற வேண்டும். அலங்காநல்லுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இந்த நிதியாண்டில் திறக்க வேண்டும் என்றார்.