| ADDED : மே 21, 2024 06:46 AM
மதுரை : உணவை பரிசோதிக்கும் ஆய்வகங்கள் என்.ஏ.பி.எல்., (சோதனை மற்றும் அளவு திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) தேசிய அங்கீகாரம் பெறுவது நல்லது'' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், ஆய்வகங்களுக்கான என்.ஏ.பி.எல்., வாரியம் சார்பில் மதுரையில் நடந்த உணவு பரிசோதனை ஆய்வகங்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.சங்கத் தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். என்.ஏ.பி.எல்.. துணை இயக்குநர் சவுந்தரபாண்டியன், செயல் அலுவலர் சங்கவி, தஞ்சாவூர் நிப்டெம் துறைத்தலைவர் வித்யாலட்சுமி, துாத்துக்குடி ஸ்பைசஸ் வாரிய விஞ்ஞானி ஆனந்த், மதுரை ஹைடெக் அராய் நிறுவன இயக்குநர் - ஆப்பரேஷன் சுகுமார் ஆகியோர் பேசினர்.திருவள்ளூவர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் குணசேகரன் பேசுகையில், பால், பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் அளவு, புரோட்டீன், கொழுப்புச்சத்து போன்ற விவரங்களையும் பிற கூடுதல் நச்சுத்தன்மை சார்ந்த தகவல்களையும் கண்காணிக்க வேண்டும். இவற்றை ஆய்வு செய்யும் ஆய்வகங்களும் என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்றதாக இருந்தால் நுகர்வோருக்கு நல்லது'' என்றார். என்.ஏ.பி.எல்., கியூ.சி.ஐ., மண்டல இயக்குநர் ஸ்ரீகாந்த் பேசுகையில், தமிழகத்தில் என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற 800 ஆய்வகங்கள் இருந்தாலும் தென்மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். துல்லிய தர பரிசோதனைக்கு ஆய்வகங்கள் என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெறுவது அவசியம். இந்த அங்கீகாரம் இருந்தால் ஏற்றுமதிக்கு நம்பகத்தன்மை கிடைக்கும். அதன் மூலம் இந்திய பொருளாதாரமும் அதிகரிக்கும்'' என்றார்.உணவு பாதுகாப்பு தரச்சட்ட இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் பேசியதாவது: உணவில் கலப்படம் இல்லையென்றாலும் உணவு பாதுகாப்பானதா என்பதை ஆய்வு செய்வதற்கு இச்சட்டம் உதவும். தானியங்கள், உணவுப்பொருட்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஆய்வுக்கு அனுப்பும்போது அந்த ஆய்வகம் தரும் முடிவு சரியானதா என்பதை கண்காணிக்க வேண்டும். சிலநேரங்களில் தவறான முடிவுகள் வரும் போது அங்கீகாரம் பெற்ற தேசிய தர ஆய்வகங்களில் மறு பரிசோதனை செய்யலாம். உணவு பாதுகாப்பு தொடர்பாக அரசு கொண்டு வரும் சட்டம், புதிய விதிகளில் பிரச்னை இருந்தால் 30 நாளைக்குள் ஆன்லைனில் தெரிவிக்கலாம். தொழில் செய்பவர்கள் இந்த விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றார்.