| ADDED : ஜூலை 29, 2024 11:14 PM
மதுரை : திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், கடந்த மார்ச்சில் கடன் செயலி மூலம், 20,000 ரூபாய் பெற்றார். அதை, கடந்த மாதம் முழுமையாக செலுத்தி முடித்தார். இந்நிலையில், நேற்று காலை ராகுல் என்ற பெயரில், 'கடனை உடனே திருப்பிச் செலுத்தாவிட்டால், உங்கள் ஆபாச படம் குடும்ப உறுப்பினர்களுக்கு பரப்பப்படும்' என எச்சரிக்கப்பட்டது. அச்சமடைந்த அந்த பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.அப்பெண் கூறியதாவது: என் முகத்தை வேறு ஒரு பெண் உடலோடு பொருத்தி, 'மார்பிங்' செய்து எனக்கு அனுப்பினர். அதற்கு நான் எதுவும் பதில் தெரிவிக்காததால், அந்த படத்தை என் குடும்பத்தினருக்கு அனுப்பப் போவதாக மிரட்டுகின்றனர். கடந்த மார்ச்சில் நான் 20,000 ரூபாய் கடன் வாங்கிய செயலியில், ஆதார் எண், போட்டோ உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டிருந்தேன். அதிலிருந்த தகவல்களை வைத்து மிரட்டுகின்றனர்.