| ADDED : ஜூலை 31, 2024 05:45 AM
மதுரை : மதுரையில் நடத்தப்படும் முகாம்களில் பட்டா மாறுதல் மனுக்களே அதிகளவில் வருகின்றன. நீராதார இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க இயலாத நிலையில் உயரதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதால் வருவாய் அலுவலர்கள் தவிப்பில் உள்ளனர்.மாவட்டத்தின் பல பகுதிகளில் பட்டா இல்லாத புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக பலர் குடியிருந்து வருகின்றனர். இவற்றுக்கு முறையான பட்டாக்கள் இருப்பதில்லை. மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகள் பலவற்றிலும் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் இடங்கள் நீராதார பகுதிகளாகவே இருக்கின்றன. நீராதார பகுதியில் பட்டா வழங்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.மாவட்டத்தில் அரசு நடத்தும் பல்வேறு முகாம்களிலும் மனு கொடுக்க வருவோரில் பெரும்பாலோர் பட்டா மாறுதல், பட்டா கேட்டுதான் மனு செய்கின்றனர். கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் முகாம், உங்களூரில் உங்களை தேடி, மக்களுடன் முதல்வர், ஜமாபந்தி உட்பட எல்லா முகாம்களிலும் வழங்கும் மனுக்களில் 80 சதவீதத்திற்கும் மேலான மனுக்கள் பட்டா, பட்டா மாறுதல் கேட்டு வருகின்றன. இதை பரிசீலிக்கும்போது பெரும்பாலான இடங்கள் நீராதார பகுதியில் இருக்கிறது.இவ்வகையில் மாடக்குளம் பகுதியில் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் நீராதார பகுதியில் உள்ளன. இதேபோல அவனியாபுரம் பெரிய கண்மாய் பகுதி, கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள சின்ன கண்மாய் பகுதியில் தலா 5 ஆயிரம் வீடுகள் நீராதார பகுதியில் உள்ளது என கண்டறிந்துள்ளனர். இதுபோல தனக்கன்குளம், கரடிப்பட்டி உட்பட பல பகுதிகளிலும் நீராதார பகுதியில் வசிக்கும் பலர் பட்டா கேட்டு வருகின்றனர்.மேலும் ஒரே இடத்தை 3 பேருக்கு பத்திரம் பதிவு செய்து இருப்பது, ஒரு மனையையே மீண்டும் மீண்டும் பிளாட் போட்டு விற்பது என பல முறைகேடு நிலங்கள் உள்ளன. இவை பட்டா மாறுதலுக்கு வரும்போது கண்டறியும் வருவாய் அலுவலர்கள் மனுக்களை நிலுவையில் வைத்து விடுகின்றனர். ஆனால் உயரதிகாரிகள், அரசியல் காரணங்களால் மனுவுக்கு தீர்வு காணும்படி அழுத்தம் கொடுப்பதாக வருவாய் அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் ரெகுலர் தாசில்தார் பதவிகூட வேண்டாம்... நிலம் எடுப்பு, நெடுஞ்சாலை, பொது வினியோகம், கோயில்கள் என வேறு ஏதாவது ஒரு பிரிவில் பணியிடம் கிடைத்தால் போதும் என்கிற அளவுக்கு மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைக்கு எப்படித்தான் தீர்வு காண்பது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.