| ADDED : மே 24, 2024 02:53 AM
மதுரை: 'கடவுள் உத்தரவின்றி ஓர் அணுவும் அசையாது' என மதுரையில் நடந்த சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் பேசினார்.மதுரை தியாகராஜர் கல்லுாரியில் கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் அருணகிரி வரவேற்றார். சென்னை சூரியநாராயணன் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.நிகழ்ச்சியில் இலங்கை ஜெயராஜ் பேசியதாவது: தமிழர்கள் உலகளவில் நிலைத்து நிற்பதற்கு திருக்குறள் என்ற ஒரு நுால் போதும். உலக படைப்பின் ரகசியத்தை கூறும் நுால். முதல் வகுப்பு மாணவர் முதல் ஆராய்ச்சி மாணவர் வரை அனைவருக்குமான நுால்.அறம் தான் உலகிலேயே பெரிய விஷயம். அதை வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என மூன்று பாகங்களாக பிரித்துள்ளார். ஒவ்வொன்றையும் இயல்களாக பிரித்து, ஒவ்வொரு இயல்களுக்குள்ளும் குறிப்பிட்ட அதிகாரங்களை வகுத்துள்ளார். இன்று அதிகாரத்துக்காக போட்டி நிலவுகிறது. திருக்குறளின் அதிகாரம் கையில் இருந்தால் எவராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வுலகில் திருக்குறள் இருக்கும் வரை தமிழர்களை யாராலும் அழிக்க முடியாது.கடவுள் உத்தரவின்றி ஓர் அணுவும் அசையாது. கடவுளின் வெளிப்பாடு இயற்கையின் மூலமாகவே தெரியும். அவ்வகையில் மழை கடவுளின் கருணைக்குச் சான்று. இயற்கையின் நுட்பத்தை முற்றும் துறந்தவர்களால் தான் உணரமுடியும்.ஒருவருக்கு பெருமிதம் வருவதற்கான 3 காரணங்கள், கல்வி, நற்குடியில் பிறத்தல், செல்வம். கல்வியால் வரும் பெருமிதத்தை அவர் கற்ற கல்வியறிவும், நற்குடியில் பிறந்ததற்கான பெருமிதத்தை அக்குடிப்பிறப்பின் பண்பும் அடக்கிவிடும். ஆனால் செல்வத்தால் உண்டான பெருமிதத்தை எதனாலும் அடக்க முடியாது. அதனால் தான் 'எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்ற குறளில் செல்வந்தர்களின் பணிவை வள்ளுவர் மிகச் சிறப்பாக குறிப்பிடுகிறார். கருமுத்து கண்ணன் அத்தகைய சிறப்புக்கு உரியவர். உயிருக்கு அழிவு என்பதே கிடையாது. வினைப்பயனுக்கு ஏற்ப அது வேறு உடலுக்குச் செல்லும். ஐம்பூதங்களால் ஆன உடல் மரணத்திற்கு பின் அவைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே ஒருவரது மரணத்திற்கு பின் அவரை இழந்துவிட்டோம் என நினைக்க வேண்டாம். சமயம் சொல்லும் தத்துவங்களை புரிந்து கொண்டால் மனம் ஆறுதல் பெறும். இவ்வாறு பேசினார்.சென்னை சூரியநாராயணன் குழுவினருக்கு கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன் பரிசு வழங்கினார். கல்லுாரி தலைவர் உமா கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தன், ஆன்மிக சொற்பொழிவாளர் சொ.சொ.மீ.சுந்தரம், முன்னாள் அமைச்சர் உதயகுமார், தொழிலதிபர்கள், ஆன்மிக தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.