| ADDED : ஜூன் 12, 2024 12:26 AM
மதுரை : மதுரை மாநகராட்சியின் தமுக்கம் அரங்கில் விழா, நிகழ்ச்சி நடத்த ஆன்லைனில் முன்பதிவு செய்யும் சேவையை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் துவக்கி வைத்தனர்.தமுக்கத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 47.72 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கு கட்டப்பட்டது. கட்டட வசதிகள் தவிர நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள 7.18 ஏக்கர் காலியிடமாக விடப்பட்டு உள்ளது. 3500 நபர்கள் பங்கேற்கும் அரங்கு, 800 பேர் ஒரே நேரத்தில் சாப்பிடும் இடம், சமையல் அறை, நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கூடுதல் இடத்தேவைக்கு ஏற்ப நகரும் தடுப்புகளுடன் நான்கு மற்றும் இரண்டாக பிரித்துக்கொள்ளும் வசதி உள்ளது. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு mducorpvenubooking.comஎன்ற ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி நேற்று துவங்கியது.மேயர், கமிஷனர் கூறுகையில், முன்பதிவு முறைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மாநகராட்சி வெப்சைட்டில் உள்ளது. நகரின் மையத்தில் உள்ள இந்த அரங்கில் 6 மைய அரங்குகள் உள்ளன. இடவசதிக்கு ஏற்ப ஒரு நாளுக்கு ரூ.52 ஆயிரத்து 148 முதல் ரூ.6.30 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்பட்டு வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் (வருவாய்) மாரியப்பன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் பங்கேற்றனர்.