வாசகர்களே வாங்க... தள்ளுபடியில் புத்தகங்களை அள்ளிட்டுப் போங்க... புத்தகத் திருவிழா மேலும் ஒருநாள் நீட்டிப்பு
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் மொத்தம் 231 ஸ்டால்களில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இத்திருவிழா இன்றுடன் (செப்.16) நிறைவடைவதாக இருந்த நிலையில் வாசகர்கள், பள்ளி மாணவர்களிடம் கிடைத்து வரும் அமோக ஆதரவால் நாளை (செப்., 17) ஒருநாள் நீட்டிக்கப்படுவதாக கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். மாலை 6:00 மணிக்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், கருத்தரங்கு நடைபெறும். அனுமதி இலவசம்.அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. பள்ளி மாணவர்களுக்கு புத்தக விற்பனையில் கூடுதல் தள்ளுபடி உண்டு. மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் பள்ளி மாணவர்கள் 2000 பேர், கல்லுாரி மாணவர்கள் 1500 பேரை பஸ்சில் இலவசமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புத்தகத் திருவிழாவில் தங்கள் அனுபவம் குறித்து வாசகர்கள் கூறியதாவது... வாசிக்கும் பழக்கம் அவசியம்
காவ்யா, பழங்காநத்தம்: ஒவ்வொரு ஆண்டும் வந்துவிடுவேன். இந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் அதிக கலெக் ஷன்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான புத்தகங்களை குவித்துள்ளனர். சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை வாங்கியுள்ளேன். ராபின் ஷர்மா எழுதிய புத்தகங்களை விரும்பி படிப்பேன். குழந்தை பருவத்தில் இருந்தே நீதிக்கதைகள், காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். வரலாறு, அரசியல் புத்தகங்கள் பிடிக்கும்
விக்னேஷ், வில்லாபுரம்: இந்த கண்காட்சிக்கே 3வது முறையாக வந்துள்ளேன். இங்குள்ள அனைத்து புத்தகங்களையுமே வாங்கிப் படிக்க ஆசைதான். எழுத்தாளர் ஜெயமோகனின் புத்தகங்களை வாங்கியுள்ளேன். தா.பாண்டியன், சேகுவாரா எழுத்துகள் பிடிக்கும். வரலாறு, அரசியல், சுயசரிதை புத்தகங்களை விரும்பி படிப்பேன். மாணவர்களுக்கு வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ள இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் கைகொடுக்கின்றன. படித்தால் தான் தெரியும்
கிருத்திக் ஆகாஷ், ஆரப்பாளையம்: 2 ஆண்டுகளாக தொடர்ந்து இத்திருவிழாவிற்கு வருகிறேன். கே.ஆர்.மீராவின் படைப்புகளை வாங்கியுள்ளேன். தத்துவம், உளவியல் சார்ந்த புத்தகங்களை விரும்பி படிப்பேன். ஓஷோவின் கலெக் ஷன்கள் நிறைய உள்ளன. புத்தகம் படித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை படித்து அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். பள்ளி, கல்லுாரிகளில் கற்பிக்கப்படாத விஷயங்களை கூட ஒரு புத்தகம் நமக்கு கற்பிக்கும். புத்தகத் திருவிழாவின் முக்கியத்துவம்
ஸ்வேதா, கோமதிபுரம்: ஆண்டுதோறும் தவறாமல் வருவேன். மாயா ஏஞ்சலோவின் கவிதைகள் பிடிக்கும். புனைக் கதைகள், உளவியல், த்ரில்லர் கதைகளை விரும்பி படிப்பேன். எழுத்தாளர் வாயிலாக புத்தகங்களை வகைப்படுத்தியுள்ளனர். சோஷியல் மீடியாவின் வளர்ச்சியால் புத்தக வாசிப்பு குறைந்து வருகிறது. அதை மீட்க இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் அவசியமாகிறது. பெற்றோர் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து பிரபலமான எழுத்தாளர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். புத்தகங்களை படிக்கும் போதுதான் சமூகம் குறித்த நமது பார்வை விரிவடையும்.