| ADDED : ஆக 06, 2024 05:12 AM
மதுரை: 'வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்' என்று சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் கூறினார்.அவர் கூறியதாவது: வருவாய்த் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக பல்வேறு போராட்டங்கள், மாநாடு நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.சமீபத்தில் சென்னையில் வருவாய்த்துறையின் 60ம் ஆண்டு வைரவிழா மாநாடு நடந்தது. இதில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், உதயநிதி, வருவாய்த்துறை கூடுதல் ஆணையர் நடராஜன், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் டானியல் ஜெயசிங், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். வருவாய் அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, தனி ஊதியம் வழங்க வேண்டும் உட்பட தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இதற்கு பதிலளித்த அமைச்சர்கள், 'தாய்த் துறையான வருவாய்த்துறை அலுவலர்களின் பங்களிப்பு பேரிடர் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேம்படுத்தப்பட்ட ஊதியம் குறித்து முதல்வருடன் ஆலோசித்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர், என்றார்.