மாணவிகளுக்கு சுகாதார திட்டங்கள்
மதுரை: பாரைப்பத்தி அரசு பள்ளியில் மாணவிகளுக்கான ஹைஜின் சென்டர், இலவச கழிப்பறைகள் திட்டங்கள் அறிவிப்பு விழா ரோட்டரி ஆளுனர் ஆனந்தஜோதி தலைமையில் நடந்தது. தலைமையாசிரியை சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். ஆனந்தஜோதி பேசுகையில், பள்ளிகளில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் மூலம் பாலின சமத்துவம், தரமான கல்வியை மாணவிகள் பெற முடியும் என்றார். ரோட்டரி சங்க மேம்பாட்டு இயக்குநர் முருகானந்தம், அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கான கல்வி, குடிநீர், சுகாதாரம் தொடர்பாக ரூ.3 கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மாவட்ட கல்வி அலுவலர் சாய்சுப்புலட்சுமி, ஒன்றிய தலைவர் வேட்டையன், தாசில்தார் சிவக்குமார், குமரப்பன், கண்ணன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தினவிழா
மதுரை: பாரத் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் சுற்றுச்சூழல் தினவிழா அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் ராஜேஷ் தலைமையில் நடந்தது. முதல்வர் செல்வகுமார் வரவேற்றார். தாளாளர் மாயக்கிருஷ்ணன் துவக்கி வைத்தார். ராஜேஷ் பேசுகையில், நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. மரங்களை பாதுகாப்பது தொடர்பாக மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். துணை முதல்வர் ராமச்சந்திரன், ஆசிரியைகள் வீரமாதேவி, மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மரக்கன்றுகள், பூச்செடிகள் வழங்கப்பட்டன. இலவச நோட்டு வழங்கல்
திருப்பரங்குன்றம்: தனக்கன்குளம் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நலமன்றம் சார்பில் நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன. தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற மேலாளர் கிருஷ்ணசாமி, மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கினார். திருநகர் ஜெயன்ட்ஸ் குரூப் நிர்வாகிகள் நடராஜன், குருசாமி, கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், சமூக ஆர்வலர் நாகராஜன், ஓய்வு டி.எஸ்.பி., மரகதசுந்தரம், மக்கள் நல மையம் தலைவர் செல்வராஜ், மன்ற நிர்வாகிகள் அண்ணாமலை, பாஸ்கர் பாண்டி, அரவிந்தன் கலந்து கொண்டனர்.