திருமலை நாயக்கர் மகாலில் மீண்டும் ஒளி, ஒலி காட்சி 3டி லேசர் தொழில்நுட்பத்தில் அறிமுகமாகிறது
மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகால் தர்பார் ஹாலில் தரைத்தள புனரமைப்பு பணிகள் முடிந்ததும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் விரைவில் 'லேசர் லைட் ேஷா' துவங்க உள்ளது.மகாலின் நாடகசாலை, பள்ளியறையை புனரமைக்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடகசாலை, பள்ளியறையில் இருந்த மியூசியத்தை தற்காலிகமாக இடம் மாற்றி கூரை வரை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிய 6 முதல் 9 மாதங்களாகும். மகாலின் தர்பார் ஹால், பிரமாண்ட துாண்களை சுற்றியுள்ள காரிடார்களின் தரைத்தளத்தில் உள்ள பழமையான கற்களை அகற்றி விட்டு அதே பாரம்பரியம் மாறாமல் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.3.7 கோடி ஒதுக்கப்பட்டது. சில மாதங்களாக பணிகள் நடந்து வரும் நிலையில் மகாலில் மாலையில் நிகழ்த்தப்படும் ஒலி ஒளி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மன்னரின் வரலாற்றை சொல்லும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ், ஆங்கில மொழியில் 45 நிமிடங்களுக்கான ஒலி ஒளி காட்சி கொண்டு வரப்பட்டது. தர்பார் ஹாலில் திறந்தவெளியில் 500 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். மழை பெய்யும் போது மட்டும் ேஷா நிறுத்தப்படும். மற்றபடி ஆண்டின் அனைத்து நாட்களும் காட்சி இடம்பெறும். தரைத்தள பணிகளுக்காக ேஷா தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் அதை புதுப்பிக்கும் வகையில் மன்னர் திருமலை நாயக்கரின் வரலாறு குறித்த 'ஸ்கிரிப்டில்' மாற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பழைய லைட்டிங்குகள் மாற்றப்பட்டு புதிதாக முப்பரிமாணத்தில் உருவங்கள் தெரியும் வகையில் லேசர் ஒலி ஒளி காட்சிக்கு சுற்றுலாத் துறை நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது தரைத்தள பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், லேசர் லைட் ேஷா அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பணிகள் முடிந்தவுடன் ஒளி, ஒலி காட்சி ஆரம்பிக்கப்படும்.