| ADDED : ஜூன் 07, 2024 06:27 AM
மதுரை: மதுரையில் ஒருவாரமாக சூறாவளி காற்றும் கனமழையுமாக தொடர்வதால் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் அறுவடைக்கு காத்திருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள்சாய்ந்ததாக விவசாயிகள்வேதனை தெரிவிக்கின்றனர். வைகை திருமங்கலம் பிரதான பாசன கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமன் கூறியதாவது: மே 18க்கு முன் பெய்த மழையால் முதலைக்குளம், விக்கிரமங்கலம், கொடிக்குளம், விண்ணகுடி, குறவக்குடி, போடுவார்பட்டி, ஆரியபட்டி, திடியன் பகுதியில் அறுவடைக்கு காத்திருந்த 700 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து அழுகின. வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சேதத்தை கணக்கிட்டு சென்றநிலையில் மீண்டும்ஒருவாரமாக மழை பெய்கிறது. இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்வதற்கு தயாராக உள்ள கதிர்களின் தாள்கள்பழுக்க ஆரம்பித்துஉள்ளது. வயலில் தேங்கும் மழைநீரை வடித்து விட்டு பயிருக்கு காற்றோட்டம் செய்தாலும் முழுமையாக காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாடிப்பட்டியில் 1000 ஏக்கர் நெற்கதிர்கள் பாழாகின. நெற்கதிர்களை சாதாரண இயந்திரத்தின் மூலம் மணிக்கு ரூ.1800 கட்டணத்தில் அறுவடை செய்யலாம். வயலில் மழைபெய்து சகதியாக இருப்பதால் இயந்திரத்தின்சக்கரங்கள் சிக்கிக் கொள்ளும் என்பதால் சகதிக்குள் இறங்கி அறுவடை செய்யும் செயின் இயந்திரத்திற்கு மணிக்கு ரூ.2800 வரை கட்டணம் தரவேண்டியுள்ளது. இதனால் அறுவடை கூலி அதிகமாகிறது. அதுமட்டுமின்றி 5 கி.மீ., தொலைவில் தள்ளித் தள்ளி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாலாந்துார் சக்கிலியங்குளத்தில் 450 ஏக்கர், திடியன் நல்லபெருமாள் பட்டியில் 300 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழையால் 50 சதவீதபாதிப்பு ஏற்பட்டுஉள்ள நிலையில் மீதிப் பயிர்களை காப்பாற்ற வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ., தொலைவிலுள்ள நெல் கொள் மையத்திற்கு நெல்லை எடுத்துச் செல்வது கடினம். எனவே இரண்டு இடங்களிலும் முன்பே செயல்பட்டது போல நெல் கொள்முதல் மையம் அமைக்க கலெக்டர் சங்கீதா உத்தரவிட வேண்டும். அதுமட்டுமின்றி இந்த வார சேதத்தையும் உடனடியாக கணக்கிட்டு சேத அறிக்கையை சென்னை இயக்குநகரத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.