சிக்னல் பழுதால் போக்குவரத்து நெரிசல்
மதுரை : மதுரை மேலமடை அருகே சிவகங்கை ரோடு - 80 அடி ரோடு சந்திப்பில் சிக்னல் பழுதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் அப்பகுதியை கடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலமடையில் இருந்து அண்ணா பஸ் ஸ்டாண்ட் செல்லும் திசையில் மேற்பகுதி சிக்னல் மட்டும் வேலை செய்கிறது. போக்குவரத்து போலீஸ் பூத் அருகேயுள்ள இடதுபுற சிக்னலும், அண்ணா நகரில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் திசையில் உள்ள சிக்னல்களும்முழுமையாக பழுதடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி பல மணி நேரம் தாமதத்திற்கு பின் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து போலீஸ்காரர் கூறுகையில், 'இப்பகுதியில் பாலம் வேலை நடைபெறுவதால் சிக்னல் கம்பிகள் அறுபட்டு பழுதடைந்துள்ளன. ஒரே ஒரு போலீசார் மட்டும் பணியில் ஈடுபடுவதால் போக்குவரத்தை சீர்செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவேஇப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது' என்றார்.பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் பழுதடைந்த சிக்னல்களை உடனேசரிசெய்து, போலீசாரை கூடுதலாக பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.