மதுரை: மதுரை தமுக்கம் - கோரிப்பாளையம் மேம்பாலப்பணிகள் நடக்க இருப்பதால் நாளை (ஜூன் 22) முதல் காலை, மாலை சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். காலை முதல் மதியம் வரை
மாட்டுத்தாவணி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, ஆசாரி தோப்பு, வைகை வடகரை ரோடு, செல்லுார் ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும். நத்தம், அழகர்கோவில் ரோட்டில் இருந்து ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள் அவுட்போஸ்ட், கோர்ட், கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் ரோடு, பனகல் ரோடு, கோரிப்பாளையம், ஏ.வி. பாலம் வழியாக செல்ல வேண்டும். பெரியார் பஸ் ஸ்டாண்ட், செல்லுார் புதுப்பாலம் வழியாக கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் வழக்கம் போல் தமுக்கம், கோகலே ரோடு வழியாக மாட்டுத்தாவணி பகுதிக்கு செல்லலாம். மதியம் முதல்
பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் செல்லுார் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் எம்.எம். லாட்ஜ், இ2 இ2 ரோடு, நவநீதகிருஷ்ணன் கோயில் சந்திப்பு, கோகலே ரோடு வழியாக மாட்டுத்தாவணி பகுதிக்கு செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி, அழகர்கோவில் ரோடு, நத்தம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் தமுக்கம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ஓட்டல் நார்த் கேட், கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஏ.வி.பாலம் செல்ல வேண்டும்.
சரிசெய்ய வேண்டும்
கோரிப்பாளையம் சந்திப்பில் பாலப்பணிகளுக்காக போக்குவரத்தை மாற்றி அமைப்பதால், வைகை நதியின் வடபகுதிக்கும், தென்பகுதிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும். இதனால் கோரிப்பாளையம் பகுதியில் பந்தல்குடி, செல்லுார், ஓ.சி.பி.எம்., பள்ளி, ஜம்புரோபுரம் பகுதிகளிலும், அண்ணா பஸ்ஸ்டாண்ட் முதல் வைகை வடகரையில் ஆசாரி தோப்பு மற்றும் செனாய்நகர், மதிச்சியம் பகுதி ரோடுகளிலும் வாகனங்கள் செல்லும்.இந்த பகுதி ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளன. இதில் வாகனங்கள் 'தடதட'த்துச் சென்று திரும்புவதற்குள் போதும், போதுமென்றாகிவிடும். பாலப்பணிகள் பல மாதங்கள் நடக்கும் என்பதால், வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த ரோடுகளில் செல்லவே முடியாத நிலை ஏற்படும். அப்போது நகரின் வடபகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். எனவே முன்னெச்சரிக்கையாக இந்த துணை ரோடுகளை இப்போதே சீர்படுத்தி தயாராக வைத்துக் கொள்வது மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினரின் கடமை.