| ADDED : ஆக 30, 2024 06:21 AM
மதுரை: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் உதயநிதி துணை முதல்வர் பொறுப்பு ஏற்பார். அவர் பொறுப்பேற்று முதல் முறையாக மதுரைக்கு வரும்போது உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.மதுரை தி.மு.க., வடக்கு மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர்கள் வெங்கடேசன் எம்.எல்.ஏ., ரோகிணி பொம்மதேவன், பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், பகுதி செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் அமைச்சர் பேசியதாவது: கொடிக் கம்பம் இல்லாத பகுதியிலும் கட்சிக் கொடி பறக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதை நிறைவேற்ற அனைத்து நிர்வாகிகளும் உழைக்க வேண்டும். '2026ல் தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்' என முதல்வர் கூறியுள்ளது உங்களை (நிர்வாகிகள், தொண்டர்கள்) நம்பி தான். தற்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர் தமிழகத்திற்கு திரும்பியவுடன் அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பு ஏற்பார். அவர் மதுரை வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். செப்., 9ல் மதுரையில் 11 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள், சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி தலைமையில் நடக்கிறது. அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராக வேண்டும் என்றார்.