உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா விளக்கிய வரதராஜனின் நாடகம்

வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா விளக்கிய வரதராஜனின் நாடகம்

மதுரை: இன்றைய உலகில் வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா என்ற கேள்விக்கு 'டிவி' வரத ராஜனின் 'காசளவு நேசம்' நாடகம் விளக்கமளித்தது.மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜம் சார்பில் நாடக விழா நடக்கிறது.நேற்று (ஆக., 24) நடந்த நாடகத்தில், பணத்தை சேமிப்பதில் அக்கறை காட்டாத கணவர் சுகவனத்தை நினைத்து மனைவி மகாலட்சுமி புலம்புகிறார். அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று, ரூ.25 லட்சத்துடன் திரும்பும் சுகவனம், மனைவி பேச்சை கேட்காமல் மொத்த பணத்தையும் முதலீடு என்ற பெயரில் ஏமாந்து விடுகிறார்.இதை அறிந்த மகாலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட, நிலை குலைகிறார் சுகவனம். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரிடமும் உதவி கேட்கையில் பணம் தான் முக்கியம் என்பதை உணர்கிறார். நாட்டில் இருப்பது பணக்காரன், நடுத்தரம், ஏழை என்ற மூன்றே ஜாதி. இந்த பிரிவை போக்க பணம் தான் மருந்து. ஆஸ்திகன், பரம்பொருளையும், பணத்தையும் ஏற்றுக் கொள்கிறான். நாத்திகன், பணத்தை பரம்பொருளாக ஏற்றுக் கொள்கிறான். இன்றைய காலகட்டத்தில் நோய்களை குணப்படுத்த முடியும். ஆனால் அதற்கு பணமோ இன்சூரன்ஸ் எடுத்தலோ அவசியம். உத்தியோகம் புருஷ லட்சணம் மட்டுமல்ல, ஒருவனது லட்சணமே உத்தியோகம் தான் போன்ற கருத்துகளை காட்சிகள் வாயிலாக முன்னிறுத்தினர்.நாயகன் சுகவனமாக 'டிவி' வரதராஜன், அவரது மனைவி மகாலட்சுமியாக லட்சுமி, தம்பி கோதண்டராமனாக ஸ்ரீதர், தங்கை விசாலமாக ஹேமா, தந்தையாக ஷங்கர் குமார், மருத்துவராக ராமானுஜம் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்தனர். எழுதி இயக்கியவர் வேதம் புதிது கண்ணன்.இன்று (ஆக., 25) காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும் 'ஜுகல்பந்தி' நாடகம் மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை