| ADDED : மே 10, 2024 05:20 AM
திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே கிராசிங்கில் தினமும் 60 முறைக்கும் மேல் கேட் அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து ரூ.52 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது.இப்பணியில் நேற்று மாலை விமான நிலைய ரோடு காமராஜர்புரம் பகுதியில் பள்ளம் தோண்டினர். இதில் நகராட்சிக்கு குடிநீர் செல்லும் பெரிய பைப் மற்றும் சோனை மீனா நகர் பகுதி மேல்நிலை தொட்டிக்கு காவிரி குடிநீர் செல்லும் பைப் ஆகியவை சேதமடைந்தன. அந்தப் பகுதியில் செல்லும் நெட்வொர்க் கேபிள்களும் துண்டிக்கப் பட்டன.கற்பக நகர், காமராஜபுரம் வட பகுதிகளில் நான்கு நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை தான் மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் பைப்புகள் சேதமடைந்ததால், அதனை சீரமைக்கும் வரை தண்ணீர் விநியோகம் பாதிக்கும் சூழல் உருவானது. நகராட்சி அதிகாரிகள் உடனே குடிநீர் பைப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இடம் மாறும் ரயில்வே கேட்
திருமங்கலம் விமான நிலைய ரோடு கிராசிங்கில் பாலம் பணிகள் நடக்கின்றன. இதில் கேட் கீப்பர் அறை உள்ள இடத்தில் துாண்கள் அமைய உள்ளன. எனவே, ரயில்வே கேட் கீப்பர் அறை மற்றும் ரயில்வே கேட், 100 அடி வரை விருதுநகர் ரயில்வே பாதைக்கு இடம் மாற்றப்பட உள்ளது.இந்நிலையில் பாலம் அமையும் இடத்தில் முறையான மாற்று பாதை ஏற்பாடு செய்யப்படவில்லை. தற்போது தோண்டும் பள்ளங்களுக்கு அருகில் ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். வாகனங்களை தடை செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.திருமங்கலம் தேவர் சிலை முதல் கற்பகம் நகர் ரோடும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு உரிய ரோடு வசதியை ஒப்பந்ததாரர்கள் செய்து தர வேண்டும், கனரக வாகனங்களை தடுப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.