| ADDED : ஜூலை 31, 2024 05:05 AM
கொட்டாம்பட்டி கொட்டாம்பட்டி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியதால் உபகரணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இம்மையம் கடந்த பிப்.,27ல் திறக்கப்பட்டது. இங்கு வேளாண், தோட்டக்கலை, பொறியியல் துறை, விற்பனை பிரிவு, அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் பயிற்சி கூடம் உள்ளது. அலுவலகத்திற்கு விவசாயிகள் உரம், மானியத்தில் விதை, அரசு திட்டங்கள், தோட்டப்பயிர் மானியங்கள், நோய் மேலாண்மை, உபகரணங்கள் பிரதம மந்திரி பயிர்காப்பீடு என அனைத்து தேவைகளுக்கும் வரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய பாதுகாப்பின்றி உபகரணங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து விவசாயி சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் துரைசாமி கூறியதாவது: அலுவலகம் ஒதுக்குப்புறமாக உள்ளது. இரவு காவலாளி, சுற்றுச்சுவர், கண்காணிப்பு கேமரா கிடையாது. அதனால் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திருடு போகும் நிலை உள்ளதால் உயரதிகாரிகள் அலுவலகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.வேளாண் உதவி இயக்குநர் சுபாசாந்தி கூறுகையில், ''அலுவலகத்தை பாதுகாக்க இரவு காவலாளி நியமிக்க வலியுறுத்த உள்ளேன்'' என்றார்.