| ADDED : ஏப் 11, 2024 06:10 AM
மதுரை : ''கோடையில் 'ஏசி' அறையில் துாங்கி 'ஏசி' அறையில் வேலை பார்ப்பவர்களுக்கு கண்கள் வறண்டு போகும் வாய்ப்புள்ளது'' என மதுரை அரசு மருத்துவமனை கண்மருத்துவ பிரிவு பேராசிரியை பர்வதசுந்தரி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: வெயில் காலத்தில் கண்களில் நீர்ச்சத்து குறைந்து வறண்டு விடும். மேலும் தொற்று மூலம் கண்ணில் கட்டி வரலாம். அழுக்கு கையால் கண்களை தொடவோ, கசக்கவோ கூடாது. வெயிலில் உடலின் தோல் பாதிப்பதை போலவே கண்ணிலுள்ள லென்சும் பாதிப்புக்குள்ளாகும். இதன் மூலம் 'காட்டராக்ட்' வரலாம். விழித்திரை பாதிப்புக்குள்ளாகும். வெள்ளைப்படலம் சிவந்து போகும். கண்வலியோடு கண்ணில் நீர் வழியும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.'ஏசி' அறையில் அதிகம் வேலை செய்பவர்களுக்கும், 'ஏசி' அறையில் துாங்குபவர்களுக்கும் கண்கள் வறண்டு போகும். 'ஏசி'யானது சுற்றுப்புறத்தில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்துவிடும். இதனால் கண்ணிலுள்ள நீர்ப்படலம் சோர்ந்து வறண்டு விடும். 'ஏசி' அறையில் வேலை பார்ப்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கம்ப்யூட்டர் பார்ப்பதை தவிர்த்து, வேறு ஏதாவது ஒரு பொருளை பார்க்க வேண்டும்.அலைபேசி, டிவி, கம்ப்யூட்டரை கண் இமைக்காமல் பார்த்தாலும் கண்ணில் ஈரப்பதம் குறைந்து விடும். அடிக்கடி கண்களை சிமிட்டும் போது கண்ணில் ஈரப்பதம் சமமாக பரவும். கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது சாதாரண கண்ணாடி அணிந்தால் நல்லது.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க காய்கறி, கீரை, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். வெயிலில் செல்லும் போது குடையுடன் கூலிங் கிளாஸ் அணிந்து சென்றால் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கலாம் என்றார்.