மதுரைக்கு 232 புதிய பஸ்கள்
மதுரை : மதுரையில் பழைய பஸ்கள் நீக்கப்பட்டு, 100 தாழ்தள பஸ்களுடன் 232 புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தாண்டு பட்ஜெட்டில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களை உள்ளடக்கிய மதுரை கோட்டத்திற்கு 513 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் மதுரை மண்டலத்திற்கென 232 புதிய பஸ்கள் மதுரை மண்டலத்திற்கு வந்துள்ளன. இவற்றில் 100 பஸ்கள் மாற்றுத்திறனாளிகள் வீல்சேருடன் பயணிக்கும் வகையிலான தாழ்தள சிறப்பு பஸ்கள். மீதியுள்ள 132 பஸ்கள் சாதாரண பஸ்கள். மொத்தமுள்ள பஸ்களில் 100 பஸ்கள் 'மொபசல்' பஸ்களாக இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பஸ்கள் வருகையால் அதே எண்ணிக்கையிலான பழைய பஸ்கள் நீக்கப்பட்டுள்ளன.இப்பஸ்கள் ஐந்து கட்டங்களாக மதுரைக்கு வந்தன. நேற்று முன்தினம் இறுதியாக 15 பஸ்கள் வந்து ஆர்.டி.ஓ., அலுவலக பதிவு முடிந்து இயங்கத் துவங்கின. அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் சிங்காரவேலு, வர்த்தக வர்த்தக உதவி மேலாளர் யுவராஜா மற்றும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.