உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / "நைட்ரஸ் ஆக்சைடு செலுத்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.50 ஆயிரம் : இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு

"நைட்ரஸ் ஆக்சைடு செலுத்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.50 ஆயிரம் : இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை : நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் 'ஆக்ஸிஜனுக்கு' பதிலாக 'நைட்ரஸ் ஆக்சைடு' செலுத்தப்பட்டதால், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கோமா நிலையிலுள்ள ருக்மணியின் (34) கணவர் கணேசனுக்கு(45) ரூ.50 ஆயிரம் இடைக்கால இழப்பீடு ஜூலை 18க்குள் வழங்கும்படி, சுகாதார துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது. நாகர்கோவிலை சேர்ந்த தேங்காய் வியாபாரி கணேசன் தாக்கல் செய்த ரிட் மனுவில், ''நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் மனைவி ருக்மணியை குடும்ப அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தேன். மறுநாள் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அவருக்கு 'ஆக்ஸிஜனுக்கு' பதிலாக 'நைட்ரஸ் ஆக்சைடு' செலுத்தப்பட்டது தெரிய வந்தது. மனைவிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். இழப்பீடு வேண்டும்,'' என கோரினார். ஐகோர்ட் கிளை உத்தரவின்படி சென்னை அரசு ஆஸ்பத்திரி நரம்பியல் நிபுணர் பூபதி, டாக்டர் ராஜா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ருக்மணியை பரிசோதித்தனர்.

நேற்று மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கணேசன் நேரில் ஆஜரானார். சென்னை நிபுணர்களின் சீலிடப்பட்ட அறிக்கையை அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார், மயக்கவியல் நிபுணர் திருநாவுக்கரசு தாக்கல் செய்தனர். அறிக்கையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட ருக்மணியின் உடல் நலம் சற்று தேறியுள்ளது. தொடர்ந்து இதே முறையில் சிகிச்சை அளித்தால், உடல் நிலை தேற வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் வக்கீல்கள் அழகுமணி, ''மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தங்க வசதி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார். இதுகுறித்து கூடுதல் அட்வகேட் ஜெரனல் கே.செல்லப்பாண்டியன், அரசு சிறப்பு பீளிடர் கோவிந்தனிடம் நீதிபதி விசாரித்தார்.

பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''சுகாதார துறை செயலாளர், மனுதாரருக்கு இடைக்கால இழப்பீடு ரூ.50 ஆயிரத்தை ஜூலை 18 அல்லது அதற்கு முன் குமரி மாவட்ட கலெக்டர் மூலம் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.மனுதாரர் மதுரையில் தங்கி மனைவியை கவனிக்க தகுந்த ஏற்பாடுகளை மதுரை கலெக்டர் செய்ய வேண்டும்,'' என்றார். விசாரணை ஜூலை 18க்கு தள்ளிவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை