52.4 சதவீத பயிர் ‛டிஜிட்டல் செயலியில் பதிவேற்றம்
மதுரை ; மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் 'டிஜிட்டல் கிராப் சர்வே' திட்டத்தின் கீழ் 52.4 சதவீத பயிர்கள் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது.விவசாயிகள் நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களின் சாகுபடி விவரம், பரப்பளவு குறித்த விவரங்கள் அடங்கல் செயலி மூலம் நவ. 6 ல் இருந்து சர்வே செய்யப்பட்டு பதிவேற்றப்படுகிறது. நேற்று திருமங்கலம் கொக்குளத்தில் நடந்த சர்வே பணியை கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார். வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், தோட்டக்கலை, விதை ஆய்வு துணை இயக்குநர்கள் பிரபா, வாசுகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ராணி, உதவி இயக்குநர் மயில் கலந்து கொண்டனர்.இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: மதுரையில் உள்ள 645 வருவாய் கிராமங்களில் மொத்தம் 16 லட்சத்து 61ஆயிரத்து 624 சர்வே எண் உட்பிரிவுகள் உள்ளன. கடந்த 8 நாட்களில் 8 லட்சத்து 91ஆயிரத்து 73 உட்பிரிவு எண்கள் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 52.4 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மதுரை விவசாய கல்லுாரி, உசிலம்பட்டி கிருஷ்ணா விவசாய கல்லுாரி, தேனி குள்ளப்புரம் சி.ஏ.டி., கல்லுாரி மாணவர்கள் 1260 பேர் சர்வே பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை கண்காணித்து ஒருங்கிணைக்க வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறையைச் சேர்ந்த 365 பணியாளர்கள் இணைந்துள்ளனர். நவ. 21 க்குள் பணிகளை முடிக்க வேளாண் துறை கமிஷனர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார் என்றார்.