910 எக்டேர் நெற்பயிர் சேதம்
மதுரை: மதுரையில் அக்டோபரில் பெய்த மழை, அடுத்து வந்த தட்பவெப்பநிலை மாறுபாட்டால் 910 எக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாயின.நெற்பயிர்களுக்கு திடீர் மழை, பனி, மேகமூட்டம் போன்ற காரணங்களால் ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த துங்ரோ வைரஸ் நோய் தாக்குதல் மீண்டும் பரவியது. மேலும் பாக்டீரியா இலைக்கருகல் நோய், இலை உறை அழுகல் நோய், குலை நோய் தாக்குதலும் தண்டுப்புழு துளைப்பான், புகையான், இலைச்சுருட்டு புழு போன்ற பூச்சி தாக்குதல் பரவியது.பாதிப்புக்குள்ளான விவசாயிகள் கூறியதாவது: திடீர் தட்பவெப்பநிலை மாறுபாட்டால் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஐந்தாண்டுகளுக்கு முன் இதேபோல மக்காச்சோள பயிர்களில் திடீர் படைப்புழு தாக்குதல் ஏற்பட்ட போது அரசு இழப்பீடு வழங்கியது. அதேபோல பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: மதுரை கிழக்கில் 298 எக்டேர், மேற்கு 123, மேலுார் 20, வாடிப்பட்டி 93, திருப்பரங்குன்றம் 81, அலங்காநல்லுார் 57, கள்ளிக்குடி 132, டி.கல்லுப்பட்டியில் 93 எக்டேர் பரப்பில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி, திருமங்கலம், கொட்டாம்பட்டியில் சிறிதளவு பாதிப்பு உள்ளது. மறு கணக்கெடுப்பு நடத்தியதில் மொத்த பாதிப்பு 910.23 எக்டேராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரம் சென்னை வேளாண் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.