உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு கூடுதல் இடம்; வராண்டாவில் தேங்கி கிடக்கும் நலத்திட்ட பொருட்கள்

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு கூடுதல் இடம்; வராண்டாவில் தேங்கி கிடக்கும் நலத்திட்ட பொருட்கள்

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்களுக்கான அலுவலகத்திற்கு கூடுதல் அறைகள் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. மதுரை மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான அலுவலகம் கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தில் தரைத்தளத்தில் அமைந்துள்ளது. இதில் மாவட்ட அலுவலருக்கு ஒரு அறையும், அதையடுத்து அலுவலகமும், மற்றொரு பகுதியில் உபகரணங்கள், பொருட்களை வைத்திருக்கும் மற்றொரு அறையும் உள்ளன. இதைத் தவிர மற்றொரு அறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாழ்வாதார பயிற்சிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத்தரும் தன்னார்வ நிறுவனமும் செயல்படுகிறது. மாவட்ட அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள், வேலைவாய்ப்புகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் திங்கட்கிழமைகளில் பலநுாறு பேர் வருகின்றனர். இதனால் இந்த அலுவலகத்தில் இடநெருக்கடி உள்ளது. அலுவலகத்திற்குள் ஊழியர்களை சந்திக்க வரும்போது நெரிசல் ஏற்படுகிறது. அலுவலரை சந்திக்க வருவோர் வராண்டாவில் ஆங்காங்கே அமர்ந்து கொள்வதால் மற்ற பிரிவுகளுக்கு செல்வோருக்கு இடையூறாகவும் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு கூடுதல் அறைகள் தேவையாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க 3 சக்கர சைக்கிள்கள், காலணிகள், செயற்கை கால்கள் உட்பட உபகரணங்கள் போன்றவை அரசால் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வரும் நலத் திட்டங்களுக்கான பொருட்களை வைக்க இடமின்றி மாடிப்படிகளுக்கு கீழே வைத்துள்ளனர். இவர்களுக்கு கூடுதலாக ஒரு அறை கிடைத்தாலும் நெரிசலுக்கு தீர்வு காண முடியும். புதிய கட்டடத்தின் பல பிரிவுகள் பழைய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டன. இதனால் பல அறைகள் காலியாக உள்ளன. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு அறை ஒதுக்கீடு செய்தால் அலுவலக நெரிசலை தவிர்க்கலாம் என மாற்றுத்திறனாளிகள், ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ