உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழக சுகாதாரத்துறை சீர்கெட்ட துறையானது: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

தமிழக சுகாதாரத்துறை சீர்கெட்ட துறையானது: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மதுரை: ''இந்தியாவில் 4ம் இடத்தில் இருந்த தமிழக சுகாதாரத்துறை தற்போது 7வது இடத்திற்கு சென்று விட்டது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஸ்டாலின்தான் அழுத்தம் கொடுத்தார் என சுப்பிரமணியம் வாய்கூசாமல் பொய் சொல்கிறார்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார். மதுரையில் அவர் கூறியதாவது: எய்ம்ஸ் பணிகள் நடக்க ஸ்டாலின் அழுத்தம் தான் காரணம், 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளின் கட்டடப் பணிகள் அரைகுறையாக இருந்தது. அது முழுமை அடைவதற்கு தி.மு.க.,தான் காரணம் என்று வாய்க்கு வந்ததை அமைச்சர் சுப்பிரமணியம் பேசலாமா. அ.தி.மு.க., ஆட்சியில் மட்டும் 17 அரசு மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டன. இதில் பழனிசாமி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்தார். அதற்காக நிதியை பெற்று பணிகளையும் செய்தார். இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1450 மருத்துவ இடங்களை அவர் பெற்று தந்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமரை அழைத்து அடிக்கல் நாட்டினர். இதற்காக அன்றைக்கே 224 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பல்வேறு உள்கட்டமைப்புக்காக ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டு பணி துவங்கியது. பழனிசாமி மத்திய அரசிடம் வலியுறுத்தி பணிகளை விரைவுப்படுத்தினார். ஆனால் முதல்வர்தான் அழுத்தம் கொடுத்தார் வாய் கூசாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்குமாறு சுப்பிரமணியம் பேசி உள்ளார். கடந்தாண்டு அரசு மருத்துவக் கல்லுாரிகளை மத்திய அரசு ஆய்வு செய்த போது 35 கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை. காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை என நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு உங்கள் நிர்வாக சீர்கேடு தானே காரணம். தற்போது அரசு மருத்துவமனைகளில் 24 ஆயிரம் மருத்துவர்கள் தேவை. ஆனால் 12 ஆயிரம் பேர் தான் உள்ளார்கள். இந்தியாவில் 4ஆம் இடத்தில் இருந்த சுகாதாரதுறை தற்போது 7வது இடத்திற்கு சென்று விட்டது. சுகாதாரத் துறையை சீர்கெட்ட துறையாக மாற்றியவர் சுப்பிரமணியம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை