உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க.,வுக்கு கூட்டணி ஆப்பு : மாநகராட்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரசார பயணம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க.,வுக்கு கூட்டணி ஆப்பு : மாநகராட்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரசார பயணம்

மதுரை: 'மத்திய அரசுக்கு எதிராக' என்ற பெயரில், தி.மு.க., தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றவும், ரோடுகள், கால்வாய்களை சீரமைத்து, கொசுத் தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்கவும் வலியுறுத்தி மதுரை மாநகராட்சிக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்கள் பிரசார நடைப் பயணம் துவக்கியுள்ளது, கூட்டணிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை லோக்சபா தொகுதியை, இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தி.மு.க., கூட்டணி ஒதுக்கியது முதல் தி.மு.க., - மார்க்சிஸ்டுகள் இடையே மறைமுக முட்டல் மோதல் தொடர்கின்றன. குறிப்பாக அமைச்சர் மூர்த்திக்கும் - எம்.பி., வெங்கடேசனுக்கும் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது.அதையடுத்து மாநகராட்சியில் ரோடுகள் சரியில்லை எனக் கூறி தி.மு.க., மேயர் இந்திராணி தரப்புக்கும் வெங்கடேசன் நெருக்கடி கொடுத்தார். மாநகராட்சி கூட்டத்திலும், துணைமேயர், மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் 'மக்கள் பிரச்னையை பேசுகிறோம்' என்ற பெயரில் மேயருக்கு குடைச்சல் கொடுப்பது தொடர்கிறது.தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி., மதுரையில் ஏ.ஏ.ரோடு தேம்பாவணி மருத்துவமனை, கிருஷ்ணாபுரம் காலனி, பைபாஸ் ரோடு நேரு நகர், ஜீவா நகர் 1வது தெரு, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மக்கள் சந்திப்பு பிரசார நடைப்பயணத்தை நடத்தியது.இந்த பிரசார பயணம் பா.ஜ.,வின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக என மார்க்சிஸ்ட் குறிப்பிட்டாலும், மாநகராட்சிக்கு எதிராகவே அதிகம் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக குண்டும் குழியுமான ரோடுகளை சீரமைக்க, மழைநீர் கால்வாய்களை துார்வார, கொசுத்தொல்லையை ஒழிக்க, பாதாளச் சாக்கடை கழிவு நீரை வெளியேற்ற, அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் நியமித்து, தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதவிர தமிழக அரசின் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரசாரம் செய்யப்பட்டது. இவ்வாறு பிரசாரம் முழுக்க முழுக்க மாநில ஆளுங்கட்சிக்கு எதிராகவே அமைந்தது.மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகையில், ''கூட்டணி வேறு, கொள்கை வேறு. மக்கள் பிரச்னைக்காக எப்போதும் மார்க்சிஸ்ட் போராடும். இதனால் கூட்டணி பாதிக்காது'' என்றனர்.தி.மு.க.,வினர் கூறுகையில், ''தேர்தல் நேரத்தில் மார்க்சிஸ்டுகளின் இதுபோன்ற பிரசாரம் கூட்டணியை பாதிக்கும். கூட்டணி கட்சியே ஆளுங்கட்சியை குறை சொல்கிறது என மக்களுக்குள் குழப்பம் ஏற்படும். பிரசார பயணத்தில் மாநகராட்சி பிரச்னைகளை தவிர்த்திருக்கலாம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 20, 2025 16:31

25,30 க்கெல்லாம் நாங்க ஒப்புக்க மாட்டோம் .விலைவாசி ஏறிப்போச்சு. பேச்சு ஆரம்பிக்கறதே 50 லேந்துதான் . நாங்க என்ன சீட்டா கேக்குறோம் .நீங்க பாத்து கொடுக்கறதை ஏத்துக்குவோம். ஆனா சி மட்டும் 50 வேணும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 20, 2025 09:54

பெரிய சூட் கேஸுக்கு ஆசைப்பட்டா என்னென்னெல்லாம் செய்யவேண்டியிருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை