உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செல்லுார், கோரிப்பாளையத்தில் சிக்கி அலறும் ஆம்புலன்ஸ்கள்; 3 கி.மீ., துாரம் கடந்து செல்ல 12 நிமிடங்கள் ஆகிறது

செல்லுார், கோரிப்பாளையத்தில் சிக்கி அலறும் ஆம்புலன்ஸ்கள்; 3 கி.மீ., துாரம் கடந்து செல்ல 12 நிமிடங்கள் ஆகிறது

மதுரை; மதுரையில் சிம்மக்கல், செல்லுார் பகுதியில் இருந்து அரசு மருத்துவமனை, பிற தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் ஒன்றரை மாதங்களாக தினமும் சிக்னலில் 10 நிமிடங்கள் வரை சிக்கி தவிக்கின்றன. நேற்று வாடிப்பட்டியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மூதாட்டியை அழைத்து வந்த 108 ஆம்புலன்ஸ், கோரிப்பாளையம் சிக்னலை கடக்க 12 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. இதுகுறித்து டிரைவர் பவுன்ராஜ் கூறியதாவது: சாதாரணமாக நிமிடத்திற்கு ஒரு கி.மீ., துாரத்தை கடந்து வருகிறோம். வாடிப்பட்டி - மதுரை அரசு மருத்துவமனை வரையான 33 கி.மீ., துாரத்தில் சமயநல்லுார் வரை 20 நிமிடங்களில் கடந்து விட்டேன். அடுத்து வந்த 11 கி.மீ., கடக்க 30 நிமிடங்களானது. சமயநல்லுார் முதல் கோரிப்பாளையம் வரை 19 வேகத்தடைகள் உள்ளன. செல்லுார் பாலத்தில் இருந்து கோரிப்பாளையம் சிக்னல் வரையான 3 கி.மீ., துாரம் வரை போக்குவரத்தால் மூச்சு திணறுகிறது. இந்த இடத்தை கடக்க மட்டும் 12 நிமிடங்களாகிறது. ஏ.வி. மேம்பாலத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக தினமும் இந்த பிரச்னையை சந்திக்கிறோம். பால வேலையை விரைந்து முடித்தால் தான் இப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்றார். போக்குவரத்து போலீசார் அவசியம் 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை, மாலை பள்ளி, கல்லுாரி விடும் நேரம், அரசு அலுவலகம் விடும் நேரத்தில் தான் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்ற நிலை மாறிவிட்டது. மதுரையில் எந்த நாளும் எந்த இடத்திற்கு சென்றாலும் ஒரு கி.மீ., நீளத்திற்கு சிக்னலில் காத்திருக்க வேண்டியுள்ளது. சிம்மக்கல் சிக்னலில் இருந்து சிம்மக்கல் தரைப்பாலம் செல்லும் வளைவில் போக்குவரத்து போலீசார் மறித்து போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கின்றனர். இது தேவையற்ற பதற்றத்தையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகிறது. தரைப்பாலத்தின் இடது கீழ்ப்பகுதி வழியாக செல்வதற்கும் இடைஞ்சலாக வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இங்கிருந்து போக்குவரத்து நெரிசல் ஆரம்பிக்கிறது. அடுத்து செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு, கோரிப்பாளைம் சந்திப்பில் வாகனங்கள் மொத்தமாக வரும் போது ரோடு ஸ்தம்பிக்கிறது. செல்லுார் வழியாக இடது பக்க வளைவில் திரும்பும் போது பஸ்களுக்கு போட்டியாக ஆட்டோக்கள் வரிசையாக நிற்பதால் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இது கோரிப்பாளையம் சிக்னலுக்கு செல்வோரையும் செல்லவிடாமல் பாதிக்கிறது. கோரிப்பாளையம் சிக்னலில் இருந்து வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் அரசு மருத்துவமனை எதிரேயும் ஆட்டோக்கள் அகலமாக வரிசை கட்டி நிற்கின்றன. கோரிப்பாளையம் சிக்னல் பகுதியில் சிக்னல் விளக்கை மாற்றுவதுடன் அங்கேயே காலை, மாலை வேளைகளிலாவது போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும். பாலம் வேலை முடியும் வரை போக்குவரத்து போலீசார் நிரந்தரமாக நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை