| ADDED : நவ 15, 2025 05:21 AM
மதுரை: தமிழகத்தில் 'அம்மா' சிமென்ட் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் 2014 ல் சிமென்ட் விலை அதிகரித்தபோது, குறைந்த, நடுத்தர வருவாய் மக்கள் பாதிக்காதவாறு 'அம்மா சிமென்ட்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் கம்பெனி விலையில் சிமென்டை அரசின் 'டான்செம்' நிறுவனம் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்தது. 1500 சதுர அடிக்குகீழ் வீடுகட்டுவோர் 750 மூடைகள் வரை வருவாய்த்துறை சான்று அடிப்படையில் ஒன்றியங்களில் இந்த சிமென்ட் மூடைகளை பெறலாம். வீடு புதுப்பிக்க, மராமத்து செய்வோருக்கு 100 மூடைகள் பெறலாம். இவை மாநில அளவில் 470 மையங்களில் வைத்து வினியோகிக்கப்பட்டது. தற்போது வெளிமார்க்கெட்டில் ஒரு மூடை ரூ.330 உள்ள நிலையில் அம்மா சிமென்ட் ரூ.216க்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. திருப்பி வழங்க உத்தரவு கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வரும் இத்திட்டத்தில், பலமாதங்களாகவே வினியோகத்தை குறைத்து வந்தனர். தற்போது சிமென்ட் கேட்டு வரைவோலை அனுப்பியவர்களுக்கு அதனை திருப்பி வழங்க உத்தர விட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த காணொலி கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி தணிக்கை அதிகாரிகள் டான்செம் நிறுவனத்துடன் நடந்த கடிதப் போக்குவரத்திலும் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அதில், ஊரக வளர்ச்சி துறை காணொலி காட்சி அறிவுரைப்படி, அனைத்து மாவட்டங்களிலும் அம்மா சிமென்ட் திட்டத்தில் சிமென்ட் மூடைகள் வரப்பெற்று, அதற்கு செலுத்தப்படாத தொகையை விரைவில் செலுத்த வேண்டும். சிமென்ட் மூடைகளுக்காக உரிய தலைப்பில் செலுத்தி, இன்று வரை மூடைகள் பெறாதவர்கள் அத்தொகையை திரும்ப பெறும் கடிதத்தை டான்செம் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அலைந்து திரிகின்றனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அம்மா சிமென்ட் வினியோக திட்டம் எந்தத் தடையும் இல்லாமல் நல்ல முறையில் செயல்பட்டு வந்தது. கடந்த ஜனவரியில் இருந்து முறையாக சிமென்ட் சப்ளை இல்லை. மாநில அளவில் பயனாளிகள் வங்கி மூலம் சிமென்ட் மூடைகளுக்காக வழங்கிய தொகையை செலுத்தியும், மூடைகள் வராததால் சிமென்ட் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பய னாளிகள் ஆறுமாதங்களாக ஒன்றிய அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். தற்போது தொகையை அவர்களுக்கு திரும்ப செலுத்திவிட்டால், இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என்பதை தெரிவிக்க கோருகிறார்கள். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.